செய்திகள்

சரவெடியாய் களமிறங்கிய பட்டாஸ் ட்ரெயிலர்!

தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதோடு வசூலிலும் அசுர சாதனை புரிந்தது.

அந்தப்படத்தில் தனுஷின் முதிர்ச்சியான நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் அதனைத் தொடர்ந்து வெளியான ‘எனை நோக்கிப்பாயும் தோட்டா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் தனுஷ் நடித்துவந்தார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று(ஜனவரி 7) வெளியாகியுள்ளது.

கொடி திரைப்படத்தில் அண்ணன்-தம்பியாக இரட்டை வேடங்களில் நடித்த தனுஷ் இந்தப்படத்தில் அப்பா-மகனாக நடித்துள்ளார். அப்பா கதாபாத்திரத்துக்கு ஜோடியாக ஸ்னேகாவும், மகன் கதாபாத்திரத்தின் ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடித்துள்ளனர்.

இன்று வெளியான ட்ரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வீரவிளையாட்டான அடிமுறை குறித்தும், அதன் மார்டன் வடிவமான கிக் பாக்ஸிங் குறித்துமான காட்சிகள் ட்ரெயிலரில் இடம் பெற்றுள்ளது.

ட்ரெயிலரில் வரும் ‘நமக்கு எது நல்லதுங்கிறது நம்ம மண்ணுக்கு தான் தெரியும்; அந்த மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறை கிட்ட கொண்டு போய் சேர்க்கிறது நம்ம கடமை இல்லியா? ’என்னும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது.

தனுஷின் மனைவியாக வீரம் மிக்க பெண்ணாக நடித்துள்ள ஸ்னேகா ஒரு காட்சியில் கையில் துப்பாக்கியால் சுடுவதைப் போன்றும் மற்றொரு இடத்தில் ஜெயிலில் இருப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

கைதி உடை அணிந்திருக்கும் ஸ்னேகா, ‘கிக் பாக்சிங்கில் தொடர் வெற்றி’ என்று வில்லனின் புகைப்படம் உள்ள பத்திரிகை செய்தியை எடுத்து சுவரில் ஒட்டுவதாகவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அடிமுறை வீரராக வரும் அப்பா தனுஷ், தனது மகனுக்கு வீரக்கலையைக் கற்றுக் கொடுக்கிறார். சிறு சிறு திருட்டு வேலைகளின் ஈடுபட்டு வரும் மகன் தனுஷ் ட்ரெயிலரின் முடிவில் கிக் பாக்ஸிங் விளையாடுவதாகக் காட்சிகள் அமைந்துள்ளது.

இதன் மூலம் அப்பா கற்றுத் தந்த பாரம்பரிய வீரவிளையாட்டின் துணை கொண்டு கிக் பாக்ஸிங்கில் வில்லனை மகன் தனுஷ் வெல்வதாகத் திரைப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோருக்காக மகன் பழிவாங்கும் கதையாக பட்டாஸ் இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பட்டாஸ் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 16-ஆம் தேதி வெளியாகவுள்ளது. விவேக்-மெர்வின் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top