செய்திகள்

பணத்தை பங்கு போடுவதில் பிரச்சினை : சித்தியை கொலை செய்த இளைஞர்

பணத்தை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் 9வது தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. நியாய விலைக்கடை ஊழியரான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி மகேஷ்வரி கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட, மகேஷ்வரியின் சகோதரி கோகிலாவை பாண்டி 2வதாக திருமணம் செய்தார்.

முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள் மற்றும் மணிகண்டன் என்ற மகன் உள்ளனர். 2வது மனைவிக்கு மகேந்திரன் என்ற மகன் (சிறுவன்) உள்ளார். இதில் கவிதாவிற்கு திருமணமாகிவிட்டது.

திருமணம் ஆகாத மணிகண்டன் அடிக்கடி மது அருந்தி தகராறு செய்துவிட்டு, சிறைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையில் பாண்டி இறப்பிற்கான பணிக்கொடை பணம் ரூ.2 லட்சம் அரசிடமிருந்து வந்துள்ளது.

அதனை மனைவி என்ற முறையில் கோகிலா பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்ற மணிகண்டன், கடந்த ஒரு வாரத்திற்கு ஜாமினில் வெளியே வந்துள்ளார். வந்த உடனே தனது சித்தி கோகிலாவிடம் அவர் பணம் கேட்டு தகராறு செய்ததாக தெரிகிறது.

இந்தச் சூழலில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு கோகிலாவின் மகன் மகேந்திரன் பள்ளியின் மூலமாக கன்னியாகுமாரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். காலையில் சுற்றுலா சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மகேந்திரன், வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்தததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கோவில்பட்டி டிஎஸ்பி ஜெபராஜ் மற்றும் மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் விரைந்து வந்து கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோகிலாவை வீட்டில் இருந்த மரச்சேரை உடைத்து, அதில் இருந்த மரக்கட்டையினால் மணிகண்டன் அடித்து கொலை செய்ததது தெரியவந்ததுள்ளது.

இதைத்தொடர்ந்து மணிகண்டனை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top