செய்திகள்

மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமரா… பெண்கள் குளிப்பதை படம் பிடித்த இளைஞன் கைது..!

பெண்கள் குளிப்பதை படம் பிடித்த இளைஞன்

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிளில் ரகசிய கேமராவை பொருத்தி பெண்கள் குளிப்பதை படம் பிடித்த இளைஞரை பொதுமக்கள் சிலர் மடிக்கிப்பிடித்து ஆரல்வாய்மொழி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தேவாளைபகுதியில் உள்ள முக்கிய கால்வாய் ஒன்றில் பாசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ள தண்ணீர் தற்போது அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. கால்வாய் அமைந்துள்ள பகுதியில் நிறைய குடியிருப்புகள் இருக்கின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பலர் கால்வாயில் குளித்து வருகின்றனர்.

அங்கு பெண்கள் குளிக்கும் படித்துறை அருகே அண்மைக் காலமாக அடிக்கடி ஒரு இளைஞன் வருவதும், காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு மோட்டார் சைக்கிள் நிற்பதுமாக இருந்துள்ளார். கால்வாயில் குளித்து முடித்து பெண்கள் வீடு திரும்பியதும், அந்த வாலிபர் பைக்கை எடுத்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

ஒரே பதிவெண் கொண்ட பைக், அடிக்கடி படித்துறையில் நிற்பது கால்வாயில் குளிக்க வரும் பெண்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து குளிக்கும் பகுதியை நோக்கியே பைக் நிறுத்தப்படுவதால், சந்தேகமடைந்த பெண்கள் அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் தெரிவித்தனர்.

தொடர்ந்து தோவாளை கால்வாயில் இளைஞனின் நடமாட்டத்தை அப்பகுதிவாசியினர் கவனிக்க தொடங்கினர். சம்பவம் நடந்த அன்று, வழக்கம் போல கால்வாயிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார் இளைஞன். அவரது நடவடிக்கையால் பொதுமக்கள் சந்தேகமடைந்தனர்.

உடனே, அவர்கள் இளைஞரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால், படித்துறைக்கு அருகே நின்றிருந்த இளைஞனின் பைக்கை பொதுமக்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்களுக்கு இரு அதிர்ச்சி காத்திருந்தது.

பஜாஜ் டிஸ்கவர் மாடலான அந்த பைக்கின் ஹேண்டில் பாரில் வையருடன் கூடிய ஒரு கருவி பொருத்தப்பட்டிருந்தது. இதை பார்த்து சந்தேகமடைந்த மக்கள், அதை கழட்டி பார்த்தனர். அதுவொரு ரகசிய கேமரா என்பது தெரிய வந்தது. கால்வாயில் குளிக்க வரும் பெண்களை படம்பிடிக்க கேமரா அங்கு மாட்டிப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இளைஞனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட மக்கள், ஆரல்வாய்மொழி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் செண்பகராமன் புதூரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

பைக்கில் பொருத்தப்பட்ட அந்த ரகசிய கேமராவை காவல்துறையினர் சோதனை செய்தனர். அதில், பல பெண்கள் குளிப்பதை அவர் பதிவு செய்திருந்தது தெரியவந்தது. பல நாட்களாக தன்னுடைய மோட்டார் சைக்கிள் ரகசிய கேமராவை பொருத்தி பெண்கள் குளிப்பதை அந்த இளைஞன் படம் பிடித்துள்ளார்.

அவரை கைது செய்த ஆரல்வாய்மொழி காவல்துறையினர், தொடர்ந்து இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீடியோக்களை வேறு யாரிடமாவது அவர் பகிர்ந்து கொண்ட என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

நல்ல தேவைகளுக்கான தொழில்நுட்பங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டாலும், அவற்றை தீய வழியில் பயன்படுத்தும் நபர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top