செய்திகள்

ஓய்வுக்குபிறகும் சேவைசெய்த மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்!

அஸ்ஸாம்

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது ஜோர்ஹட் என்ற தேயிலை எஸ்டேட். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குச் சிகிச்சை அளிக்க 73 வயதாகும் தேபன் தத்தா என்ற ஒரே ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். மருத்துவர் பணி ஓய்வு பெற்றும் தொழிலாளர்களுக்காக அவரை பணியில் அமர்த்தியுள்ளது நிர்வாகம்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு 33 வயதாகும் சுக்ரா மாஜி என்ற தொழிலாளிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பிற தொழிலாளர்கள் அனைவரும் அவரைத் தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர். ஆனால், அந்த நேரத்தில் தேபன் தத்தா மருத்துவமனையில் இல்லை எனத் தெரிகிறது. அந்த நேரத்தில் பிற ஊழியர்களும் மருத்துவமனையில் இல்லை.

இதற்கிடையில் சுக்ரா மாஜிக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி உயிரிழந்துள்ளார். பின்னர், பிற்பகலுக்கு மேல்தான் மருத்துவர் வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த பிற தொழிலாளிகள் மருத்துவர் தேபன் தத்தாவை சரமாரியாக அடித்துள்ளனர். சுமார் 250 பேர் இணைந்து வயதான ஒருவரை தாக்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சிலர் கூர்மையான கண்ணாடிகளைக் கொண்டும் கீறியுள்ளனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள் மருத்துவரைக் கும்பலிடமிருந்து மீட்டுள்ளனர். ஆனால், மருத்துவர் தேபன் தத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மருத்துவர் தாக்கப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இதையடுத்து மருத்துவரைத் தாக்கி கொலை செய்தது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோர்ஹட் தேயிலை எஸ்டேட் மூடப்பட்டுள்ளது. “தேபன் தத்தா, தன் பணி முடிந்தும் அங்குள்ள தொழிலாளர்களுக்காகத்தான் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருந்தார். ஆனால், அநத் தொழிலாளர்கள் அவரைக் கொன்று நன்றி தெரிவித்துவிட்டனர்” என அம்மாநில மருத்துவர்கள் நலச் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top